மெர்சல் பிரச்சினை நல்லபடியாக முடிந்துவிட்டது - தமிழிசை சௌந்தர்ராஜன்
மெர்சல் விஷயத்தில் பாஜக தலைவர்கள் அடிக்கும் ஸ்டன்ட்களும், லூட்டிகளும் அந்தக் கட்சியை செம காமெடியாக்கிவிட்டன. மெர்சல் என்ற படம் வெளியானபோது பலர் படம் சரியில்லை என்றார்கள். இன்னும் பலர் சுமாரான படம், ஒரு முறை பார்க்கலாம் என்றார்கள். விஜய் ரசிகர்களே கூட, ஏன் இப்படி பழைய படங்களைக் காப்பியடிக்கிறார் அட்லீ என சலித்துக் கொண்டார்கள். எல்லாம் ஒரு நாள்தான். தீபாவளிக்கு மறுநாளிலிருந்துதான் மெர்சலுக்கு நிஜ தீபாவளி கொண்டாட்டம் ஆரம்பமானது.
தமிழிசை சௌந்தர்ராஜனும், எச் ராஜாவும், பொன் ராதாகிருஷ்ணனும் அடுத்தடுத்து மெர்சல் படத்துக்கு எதிராக உளறிக் கொட்ட, படத்துக்கு தேசிய அளவில் விளம்பரம் கிடைத்துவிட்டது. திரையிட்ட இடமெல்லாம் திருவிழா கூட்டமானது. மெர்சல் சுமார் படமோ நல்ல படமோ... பாஜக லூசுத்தனமா எதிர்ப்பதால அது இனி நம்ம படம் என்ற உணர்வோடு, படத்துக்கு கூட்டம் கூட்டமாக போக ஆரம்பித்துவிட்டனர். இந்த ஆறு நாட்களாக மீடியாவில் பாஜக தலைவர்களைப் போல யார் தலையும் உருண்டிருக்காது. அப்படியும் திருந்தியதாகத் தெரியவில்லை. குறிப்பாக எச் ராஜா மிகவும் விஷமத்தனமான கருத்துக்களைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார். விஜய்க்கு மதச் சாயம் பூச ஜோசப் விஜய் என்கிறார். அவரது வாக்காளர் அடையாள அட்டையை பொது வெளியில் போடுகிறார். இவ்வளவும் நடந்த பிறகு, இப்போது தமிழிசை சௌந்தர்ராஜன் மெர்சல் பிரச்சினை நல்லபடியாக முடிந்துவிட்டது என என்ட் கார்டு போட்டுள்ளார். நல்லவிதமாக முடிந்தது என்றால் என்ன அர்த்தம்? இவர்கள் கோரியபடி ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு காட்சிகள் நீக்கப்பட்டு விட்டனவா? அல்லது வேறு வழியில் பேரம் படிந்துவிட்டதா? அல்லது மெர்சலுக்கு இலவச பப்ளிசிட்டி தருவதுதான் இந்த ஆறு நாள் அட்ராசிட்டிக்கு காரணமா? எந்த அடிப்படையில் மெர்சல் பிரச்சினை நல்லபடியாக முடிந்தது? இணைய வெளியில் வீசப்பட்டுள்ள இந்தக் கேள்விகளுக்கு பதிலிருக்கிறதா தமிழிசையிடம்?
Labels
News
Post A Comment
No comments :